ஈத் காற்றில் (பெருநாளில்) மானுட வாசனை!-ஸ்ரீராம் சர்மா

எங்கு எப்படியோ தெரியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுகாறும் ரம்ஜான் மகிழ்ச்சி -யாகத்தான் கொண்டாடப்பட்டு வருகிறது. சொல்லப்போனால், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் புனித ரம்ஜான் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது எனலாம். இந்த கொரோனா கொடுங்காலத்தில் ரம்ஜானை விமரிசையாகக் கொண்டாடுவதா? அது எப்படி சாத்தியம் எனச் சிலர் கேட்கலாம். சாத்தியமே என்கிறார்கள் முஸ்லிம் சகோதரர்கள். கடந்த இரண்டு வருடங்களாக வாய்த்திருப்பதுதான் உண்மையான மார்க்கக் கொண்டாட்டம் என்கிறார்கள்! ஆம், புத்தாடை உடுத்துவது - புது லுங்கி சரசரக்க நடந்து சென்று ஊர் கூடும் பெருநாள் தொழுகைகளில் பங்கேற்பது - நண்பர்களோடு இனிப்பு, பிரியாணியைப் பரிமாறிக் கொள்வது போன்றவைதான் கொண்டாட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதில்லை. இரண்டு ஆண்டுகளாகப் பெருநாளை கொண்டாட முஸ்லிம்கள் தங்கள் கையில் ஏந்திய இனிப்பு வகைக்குப் பெயர் - மானுடம்! அன்றொருநாள், கொரானா தொற்றரக்கனைக் கட்டுப்படுத்தும் முகமாக திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட - வலியோர் அனைவரும் வீடடங்கித் தப்பித்துக் கொள்ள… சாலையோரங்களில் சிக...