ஈத் காற்றில் (பெருநாளில்) மானுட வாசனை!-ஸ்ரீராம் சர்மா


எங்கு எப்படியோ தெரியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுகாறும் ரம்ஜான் மகிழ்ச்சி -யாகத்தான் கொண்டாடப்பட்டு வருகிறது.

சொல்லப்போனால், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் புனித ரம்ஜான் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது எனலாம்.

இந்த கொரோனா கொடுங்காலத்தில் ரம்ஜானை விமரிசையாகக் கொண்டாடுவதா? அது எப்படி சாத்தியம் எனச் சிலர் கேட்கலாம். சாத்தியமே என்கிறார்கள் முஸ்லிம் சகோதரர்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக வாய்த்திருப்பதுதான் உண்மையான மார்க்கக் கொண்டாட்டம் என்கிறார்கள்!

ஆம், புத்தாடை உடுத்துவது - புது லுங்கி சரசரக்க நடந்து சென்று ஊர் கூடும் பெருநாள் தொழுகைகளில் பங்கேற்பது - நண்பர்களோடு இனிப்பு, பிரியாணியைப் பரிமாறிக் கொள்வது போன்றவைதான் கொண்டாட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதில்லை.

இரண்டு ஆண்டுகளாகப் பெருநாளை கொண்டாட முஸ்லிம்கள் தங்கள் கையில் ஏந்திய இனிப்பு வகைக்குப் பெயர் - மானுடம்!

அன்றொருநாள், கொரானா தொற்றரக்கனைக் கட்டுப்படுத்தும் முகமாக திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட - வலியோர் அனைவரும் வீடடங்கித் தப்பித்துக் கொள்ள…

சாலையோரங்களில் சிக்கித்தவித்த மெலியோரைத் தேடித் தேடிப் போனார்கள் இஸ்லாமிய சகோதரர் -கள் சமைத்த உணவை அள்ளி அள்ளிக் கொடுத்து வயிறு நிரப்பினார்கள்.

ஆச்சரியத்தோடும் - நன்றியோடும் கண்கள் பனிக்கப் புன்னகைத்த அந்த ஏழை முகங்களில் இறைமையைக் கண்ட களிப்பில்…“மாஷா அல்லாஹ்” என்றபடியே புனித ரம்ஜான் விரத காலத்தைக் கடந்தார்கள்.

ஆம், இதைவிடக் கொண்டாட்டம் வேறொன்று உண்டுமா என வாழ்ந்து காட்டிக் கேட்டார்கள். கேட்டுக் கொண்டே  இருக்கிறார்கள்!

கொரோனா கிருமியின் தாக்குதலில் இருந்து சக உயிர்களைக் காப்பாற்ற விரதகாலப் பட்டினி வயிற்றோடு நகரெங்கும் ஓயாமல் ஓடிக்கொண்டி -ருக்கின்றன தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸுகள்…

ஒன்றல்ல, இரண்டல்ல… ஏறத்தாழ 200 ஆம்புலன்ஸுகள் ஓடிக் கொண்டிருக் -கின்றன.    சுழலும்.  அதன் சைரன் ஒலிகள் பாங்கு ஒலிகளாகக் காற்றில் பரவ, வேதனையிலும் மனம் நெகிழ்ந்து போகிறது.

உங்கள் ஆம்புலன்ஸுகள் சாதி மதங்கள் கடந்து அனைவருக்காகவும் ஓடுமா என்று கேட்டால் தமுமுகவின் பொதுச் செயலாளர்பேரன்பிற்கினிய சகோதரர் ஹாஜாகனி அவர்கள் புன்சிரித்தபடியே…

“உன் தலைவாசலுக்குப் பக்கத்தில் இருப்பவருக்கு உதவி செய்… என்று தான் ஹதீஸ்எனும்எங்கள்நபிமொழி  சொல்கிறதே தவிர, அண்டை வீட்டுக் காரன் இஸ்லாமியனா என்று கேட்டு விட்டுச் செய் என்று சொல்லவில்லை. அப்படியிருக்க, அவரது மொழியைத் தலைமேல் வைத்து சுமக்கும்நாங்கள் மட்டும்   பேதம் பார்த்து  விடுவோமா என்ன?” என்று திருப்பிக் கேட்கிறார்.

இந்தத் தெளிந்த ஞானமும் மானுடமும்தானே உண்மையான ரம்ஜான் காலக் கொண்டாட்டம்!

இவ்வுலக வாழ்கையை முடித்துக் கொண்டு மறுமைக்குச் சென்ற மனிதன் ஒருவன் ஆங்கே இறை -வனின்  முகத்தில் கருணையை எதிர்பார்த்தபடி நின்றானாம்...

அவனைப் பார்த்து இறைவன் கேட்டானாம்… “ஆதத்தின் மகனே (மனிதனே) நான் நோயுற்றுக் கிடந்தபோது என்னை நலம் விசாரிக்க வந்தாயா?”

அதிர்ச்சியுற்ற மனிதனோ, “என் அதிபதியே, அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாகிய நீ எப்படிநோயுறுவாய் நான் எங்ஙனம் உன்னை வந்து பார்க்க…” என்று குழம்பியபடியே கேட்க…

“உன்னுடைய நகரத்திலே… என் அடியான் ஒருவன் நோயுற்று இருந்தானே… அவனைக் காணச் சென்றிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்!” என்றானாம் இறைவன்.

அதை சிரமேற்கொண்டுதான் மருத்துவப் பிரிவு என்ற ஒன்றை உண்டாக்கி, தங்களுக்குள் இரவு பகல் என முறை வைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிகள்தோறும் சென்று கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய சகோதரர்கள்.

கும்பகோணத்தில் ஒரு கொடுமை. எத்தனையோ குழந்தைகளைப் பதமாகப் பற்றியிழுத்து இந்த உலகத்தைப் பார்க்க வைத்தவர் மகப்பேறு மருத்துவ நிபுணர் விஷ்ணுப்ரியா.

அந்தத் தாய் கொரோனா நோய்த் தொற்றின் முதல் அலையில் சிக்கி மாண்டபோது… செய்வதறியாமல் அச்சத்தோடு பதறிய உறவுகளுக்கு நடுவே,மருத்துவப்பாதுகாப்புகளோடு சென்று இறங்கினார்கள் இஸ்லாமிய சகோதரர்கள்.

தளும்பும் விழிகளோடு மருத்துவத் தாய் விஷ்ணுப்ரியாவின் சடலத்தைத் தூக்கிச் சுமந்தபடி,

“அஷ்ஹதுவன்… லா இலாஹா இல்லல்லா… மொஹம்மதுர் ரசூலல்லா…” என்னும் கலீமாவை மெல்ல உச்சரித்தபடியே ஊர் மயானத்தை நோக்கி விரைந்தார்கள்.

ஆங்கே, இந்து முறைப்படியே எரியூட்டி அந்த மருத்துவத் தாயை வழியனுப்பி வைத்தார்கள்.

இப்படி எத்தனை எத்தனையோ மனித   நேய    செயற்பாடுகள்... அத்தனையும் விரதகாலக் கொண்டா -ட்டங்கள் என்கிறார்கள். மானுடம் தழுவும் மொத்த செயற் பாடுகளும் அவர்களது மறுமைக்கு உண்டான நறுமணப் பாதையைபோட்டுக்
கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

‘ரமிதா’ என்னும் அரபு வார்த்தை -யிலிருந்து எழுந்ததே ரமலான்! அதற்குச் சுட்டெரித்தல் என்று பொருள்! ஆம், தீமையைச் சுட்டெரி -க்கும் காலம்தான் இந்த ரம்ஜான் காலம்.

“இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சேமிப்பிலிருந்து இரண்டரை சதவிகிதத்தை ஏழை மக்களோடு பகிர்ந்து கொண்டாக வேண்டும்.

அதுமட்டுமல்ல, செல்வந்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கண்பார்வையில் படும் ஏழை ஒருவரை வறுமைக்கோட்டுக்குள் இருந்து நிரந்தரமாக மீட்டெடுத்து அவருக்குத் தொழில் ஒன்றை அமைத்துத்தர வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறது…” 

இதன் காரணமாக ஒவ்வொரு ரம்ஜான் காலத்திலும் எத்தனையோ ஏழைகள் வறுமைக்கோட்டை கடந்து மேலேறிக் கொண்டிருக்கிறார்கள் 

மார்க்க அறிஞரும் - எழுத்தாளருமான மரியாதைக்குரிய டாக்டர் KVS ஹபீப் அஹமத் அவர்கள், “படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும்.

படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்துக்கு உரியவராகிறார்...” என மார்க்கம் வலியுறுத்துவதாகச் சொல்கிறார்.

“உங்கள் நலனைப் பற்றி நாங்கள் சிந்திப்பதும் - எங்களைப் பற்றி நீங்கள் எழுதுவதும் மார்க்கத்தின் கண்ணாடிதான்…” என மனம் நிறைகிறார்.

“வசுதேவகக் குடும்பகம்…” என்னும் ஸ்லோகத்தின் பொருளும் இதுதானே?

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்…” என்னும் மகிபாலன்பட்டிக் கணியன் பூங்குன்றனாரின் அறைகூவலும் இதுதானே?

மொத்தத்தையும் குழைத்து மானுடத்தோடு அமல்படுத்தும் இந்த விரதகாலக் கடமையைவிட வேறெது கொண்டாட்டமாகிவிட முடியும்!?

மானுடம் போற்றும் இஸ்லாமிய சமூகமே, இந்த ஈத் பெருநாளில் சிரம் தாழ்ந்த எனது எளிய வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! மதங்களைக் கடக்கும் உங்கள் ஈர மனம் நெகிழச் செய்கிறது. உங்களது அர்ப்பணிப்புக் குணத்தால் இந்தச் சமூகம் இன்னும் இன்னும் ரம்மியமாகிறது.

கடந்த இரண்டு ரம்ஜான் காலங்களை சமூகப் பணிக்காகத் திருப்பி விட்டிருக்கிறீர்கள்.

சகோதரத்துவத்தை மேலும் இறுக்கி விட்டீர்கள். அந்த நன்றியை இந்த சமூகம் என்றும் மறவாது!

எல்லோரும் ஒன்றிணைந்து முதலில் இந்த கொரோனா அரக்கனை வென்றெடுப்போம்! இன்ஷா அல்லாஹ்… அடுத்தாண்டின் ரம்ஜானை பிரியாணியோடு கொண்டாடுவோம்!

சமூகம் நிலைபெற்றிருக்கும் அந்த நாளில்… நாம் எல்லோரும் சுற்றி அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அந்தப் பொழுதில்…

உங்களுக்கு எல்லாம் மட்டன் வாசனை வீசும்!

எனக்கு மட்டும் உங்கள் மானுட வாசனை வீசும்!

நிறைந்த பெருநாள் வாழ்த்துகள்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்து -க்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டி ருந்த வேலுநாச்சியாரின் வீரவர லாற்றை 12 ஆண்டுக் காலஆய்வுக்கு பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதைத் திரைப் படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்கா வின்  மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார்.

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்ஆவார்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்