மின்வாரியத்தின் திடீர் நடவடிக்கையால் மக்கள் அவதி!

மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்ற மின் வாரியத்தின் திடீர் நடவடிக்கை பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடுகணக்கிடப் பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

மின் நுகர்வோர் அச்சம்

நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

திடீர் நடவடிக்கை

இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் திடீர் நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்ற மின் நுகர்வோருக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்படுகிறது.

குறுஞ்செய்தி

பின்னர், ஆதாரை இணைக்கும் பக்கத்துக்கு தானாகவே சென்று ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையான விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் பக்கத்திற்கு செல்லும் வகையில் அந்த இணையதளத்தில் மின்வாரியம் மாறுதல்களை செய்துள்ளது.

அதேபோன்று கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி குறுஞ்செய்தி அனுப்ப மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இதன்மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகும் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது, ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்பதாகவும், இன்னும் சிலருக்கு தங்களது ஆதார் பதிவு ஏற்கப்படவில்லை, மீண்டும் முயற்சிக்கவும் என பதில் வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, 'இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் எண்ணை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதாரை இணைக்கும் போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மின் இணைப்பு துண்டிப்பு

ஆதார் இணைப்பு தொடர்பான மின் நுகர்வோரின் தொழில்நுட்ப புகார்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்யப்படுகிறது. மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்பது போன்று ஒரு கெடு விதிக்கப்படாதபோது ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை அடையாது' என்றார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும், ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments

Popular posts from this blog

The World Water War 1999- 2001 took place in the city of Cochabamba, Bolivia.

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu