கயத்தாறு, நாலாட்டின்புதூரில் ரூ.2.41 கோடி கடனுதவி வழங்கல்
கயத்தாறு, நாலாட்டின்புதூரில் ரூ.2.41 கோடி கடனுதவி வழங்கல்
கயத்தாறு மற்றும் நாலாட்டின்புதூர் இல் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் ரூ.2.41 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
கயத்தாறில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி கட்டடம் ரூ.15 லட்சத்தில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு நவீனமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வங்கி கட்டிடத்தை திறந்து வைத்து, 504 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடி கடன் உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, வில்லிசேரி ஊராட்சி கிருஷ்ணா நகர் முதல் குறுக்கு தெரு வரையிலான 500 மீட்டர் தொலைவுக்கு ரூ.24.48 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இடைசெவலில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் இடைசெவல் ஊருணியில் ரூ.9 லட்சத்திலும், உப்பு ஊருணியில் ரூ.2 லட்சத்திலும் குடிமராமத்து பணி திட்டத்தில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் நாலாட்டின்புதூரில் இருந்து இனாம் மணியாச்சி, மந்தித்தோப்பு, இலுப்பையூரணி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம் ஆகிய 5 ஊராட்சிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நாலாட்டின்புதூரில் ரூ.20.28 லட்சத்தில் நவீன மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டடத்தை திறந்து வைத்து, 39 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார். நாலாட்டின்புதூர் ஊராட்சி ராஜகோபால் சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் ரூ.9 லட்சத்தில் குடிமராமத்து திட்டம் மூலம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கஸ்தூரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், உறுப்பினர் ராமசந்திரன், வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் ரவிசந்திரன், கோவில்பட்டி கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் ஜெயசீலன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரமணிதேவி, முதன்மை வருவாய் அலுவலர் அருள்ஜேசு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் பிரியா, சந்திரசேகர், கூட்டுறவு அச்சகத் தலைவர் அன்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலர் வினோபாஜி, நாலாட்டின்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் சேகர், இனாம்மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
முத்துக்குமார்
Comments
Post a Comment