மனிதர்களும் அவர்களுடைய மாடமாளிகைகளும்
ஒரு நாள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மலை மீது ஏறி சென்றார்கள். அங்கு ஒருவர் வெயிலில் தொழுது கொண்டு இருப்பதை கண்டனர். அவர் தொழுததும் அவரிடம் சென்று "தாங்கள் வெயிலையும் மழையையும் விட்டு தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு வீட்டை அமைத்து கொள்ளக் கூடாதா?" என்று கேட்டனர்.
அதற்கு அவர் "இறைவனின் தூதரே, நான் எழுநூறு வயதுக்கு மேல் வாழமாட்டேன் என்று பல நபிமார்கள் என்னிடம் கூறி உள்ளனர். இத்தனை குறைந்த வயதை பெற்றுள்ள நான் வீட்டை கட்டுவதில் என் வாழ்நாளை செலவு செய்ய விரும்பவில்லை" என்று கூறினார்.
அப்போது ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அவரை நோக்கி "இதை விட ஆச்சர்யமான ஒரு விடயத்தை சொல்லவா? என்று கேட்டார்கள்.
"என்ன அது" என்று வியப்புடன் கேட்டார் அந்த மனிதர்.
"உலகின் இறுதி காலத்தில் தோன்றும் மனிதர்கள் நூறு வயது கூட வாழ மாட்டார்கள். ஆனால் அவர்களோ ஆயிரம் வருடங்கள் வாழ்வது போல் எண்ணிக்கொண்டு மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கட்டுவதில் தமது வாழ் நாளை செலவு செய்வார்கள்" என்றனர் ஈசா (அலைஹிஸ்ஸலாம்)...
அப்போது அந்த மனிதர் "அச்சமயம் நான் உயிரோடு இருப்பின் நான் என் வாழ்நாளை ஒரே சஜ்தாவில் கழித்து விடுவேன்" என்று கூறினார்...
எம்முன்னோரைக் கொண்டு நாம் எமது வாழ்வு எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எமது சமூகம் நவீனம் என்னும் நாமம் தாங்கி வீணான பல செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே சில மனிதர்கள் மட்டுமே இறை நேசத்தை பெற்றுக் கொள்ள வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
சற்று சிந்திப்பீர், மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணியில் எமது வாழ்வினில் நாம் எவ்வளவு அல்லாஹ்வை துதி செய்தாலும் அது போதுமானதாக இருக்காது என்பதை அன்றே அவர்கள் கூறிவிட்டனர். அது அறியா நாம் எமது நேரங்களை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம்.
அல்லாஹ் மறுமையில் நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பதை பார்க்க மாட்டான் என்ன அமல் செய்துள்ளாய் என்று தான் பார்ப்பான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்...
Comments
Post a Comment