நியாயமான ஆட்சி
ஆட்சி, அதிகாரம் என்பது இறைவன் கொடுத்த வரம், இறைவன் வழங்கிய அமானிதம். அதை வைத்து குடிமக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். அதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்டால் நாளை இறைவனின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் என்பதை பின்வரும் நபி மொழி இவ்வாறு உணர்த்துகிறது.
உமரின் (ரலி) பரம்பரையில் வந்தவர்தான் உமர்பின் அப்துல் அஜீஸ் என்பவர். இவர் இரண்டாம் உமர் என்றழைக்கப்படுகிறார். இவரும் உமரைப் போன்று நியாயமான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். இவரின் நியாயமான ஆட்சியின் தாக்கம் குடிமக்களையும் தாண்டி மிருகங்களின் மீதும் தென்பட்டது.
இது எந்தளவுக்கென்றால் ஒரே நீர்த்தேக்கத்தில் ஆடும், ஓநாயும் ஒன்றாக, ஒற்றுமையாக நீர் அருந்தியதை மக்களே கண்கூடாகக் கண்டார்கள். சில காலங்களுக்குப் பிறகு அதே நீர்த்தேக்கத்தில் ஓநாய் ஆட்டைக் கடித்துக் கொன்றது. இதை கவனித்த மக்கள் ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் இறந்துவிட்டாரோ என நினைத்தார்கள்.
அவரும் இறந்துவிட்ட செய்தியை மக்கள் உறுதிப்படுத்தினர்.
இறைவனிடம் நாம் கோருவது உதவி. ஆட்சியாளர்களிடம் நாம் கேட்பது உரிமை. குடிமக்களின் உரிமைகளை வழங்கி, அவற்றை பாதுகாப்பது அரசின் கடமை. அவ்வாறு ஆட்சி செய்வதுதான் நியாயமான ஆட்சி.
‘இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்களில் ஒருவர் நீதியை நிலைநாட்டும் ஆட்சியாளர் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)
நியாயமான ஆட்சிக்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பு மட்டும் போதாது. குடிமக்களின் பொறுப்புணர்வும், பங்களிப்பும் அவசியம் தேவை. அது எவ்வாறு அமைய வேண்டுமெனில் அவர்கள் நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பாவத்தில் கூட்டாகாமல் நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு உடன்பட்டு நடக்கவேண்டும்.
அரசியல் சாசனத்தை மதித்து, பொது அமைதி காத்து, சட்டம் ஒழுங்கை பேணி நடக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், பொது நன்மைக்கும் பாடுபட்டு, அரசுக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
நியாயமான ஆட்சிக்கு ஆட்சியாளர் ஆட்சித் தகுதி, நிர்வாகத்திறமை மிக்கவராக இருக்கவேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர் மக்கள் பணியாளராக வலம் வரவேண்டும். சாமானியர்கள் நெருங்கும் தூரத்தில் இருக்க வேண்டும். தவறு சுட்டிக் காட்டப் படும்போது அதை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு இருவரும் இணைந்து பொறுப்புடன்செயல்படும் போது நியாயமான ஆட்சி தொடரும். ஆட்சியாளர் களின் மக்கள் தொண்டு இறைத்தொண்டாகமாறும்
மக்களுடன் மக்களாக, மக்களுக்காக நியாயமான ஆட்சி கொடுப்பதை, இஸ்லாம் விரும்பி வரவேற்கிறது.
Comments
Post a Comment