யார் அவர்?

உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.

தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்டமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களைவென்றெடுத்துள்ளது.

தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை, தலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை,
ஆனால் கொள்கை மட்டும் விஸ்வ ரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. 14 நூற்றாண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது. அவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.

உள்ளங்களை ஈர்த்தது மட்டுமல்ல, 200 கோடி மக்களும் தங்கள் உயிரை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள்.
200 கோடி மக்களும் தங்களுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர் காட்டிச் சென்ற வழியிலேயே தீர்வை எட்டு கின்றனர். இது வேறு எந்த சமுதாய த்திலும் இல்லாத தனிச்சிறப்பு.

இஸ்லாமியர்கள் அதிகம் தர்மம் செய்பவர்கள்   என்று  பிரிட்டன் கூறுகிறது. உலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல் நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப்பட்டாலும் இஸ்லாமியர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.

இஸ்லாமியர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மையான சொந்தக்காரர். அவர் தான் இஸ்லாமியர்களுக்கு மனிதநேயத்தை ஊட்டினார். 

பொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றி கொண்டிருக்கிறது.
அவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

யார் அவர்..?

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே..!!

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)
 
கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை. (ஆதாரம் புஹாரி 5413)
 
அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை. 
(ஆதாரம் புஹாரி 5413)
 
வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.
 
பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.(ஆதாரம் முஸ்லிம் 3799)
 
உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)
 
ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்தினார்.
 
போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.(ஆதாரம் புஹாரி 1277)
 
 
அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டி ருக்கிறார்கள்(ஆதாரம் புஹாரி 5386)
 
இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)
 
தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)
 
ஒருவர் படுத்திருந்தால் இன்னொரு வரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)
 
மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர் களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)
 
 
நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.
 
நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில்100ல்ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சை யெடுப்பவரை தான் நாம் பரம ஏழை என்போம்.
 நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?
 
இத்தனைக்கும் அப்போது அவர் மன்னர். நாட்டுக்கே ஜனாதிபதி. போர்ப்படை தளபதி,மார்க்க அறிஞர்,இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத்தூதர் சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

ஆக‌, வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம். வறுமையிலும் வீரம் வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி வறுமையிலும் சுய மரியாதை வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??
எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..
 
மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கினார்.
 
நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

முகம்மது நபி ஒரு கணிப்பின் படி கிபி 570இல் சவூதி அரேபியாவில்
மக்கா நகரில் பிறந்தார் இவருடைய தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள்.
 சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலி யிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்க துவங்கின

 அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளி லேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் முகம்மது நபி.நபியின் வாழ்க்கையை பார்த்தால்.... நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை கொடுத்திருக்கும் அல்லாஹ்விற்கு கோடான கோடி நன்றியை செலுத்தினாலும் மிகையாகாது.

எண்ணி பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் இந்த அளவிற்கு நம்மை வைத்திருக்கிறானே என்று...... அல்லாஹ்விற்கு நன்றி கூற கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் அல்லாஹ்விடம் பேச வேண்டும் என்றால் தொழுகையில் மட்டும் தான் பேச முடியும் ஆகவே ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்விற்கு நீங்கள் நன்றி கூறுபவர்களாக இருங்கள்......

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தொடர்ச்சி அடுத்த வாரம் ஜும்மாவிற்கு வெளியிடுவேன்....

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்